புதியதாக அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்..!
தருமபுரி அடுத்த முக்கல்நாய்க்கன்பட்டி, உங்கரானஹள்ளி ஊராட்சிகளில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் சுமார் 10000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் செல்லவும், வேலைக்கு செல்பவர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குட்டக்கரை பகுதியில் பேருந்துக்காக செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் பணி முடிந்தும், சிறப்பு வகுப்பு முடிந்து வரும் பெண்கள் தனியாக வரும் சூழல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் குட்டக்கரை பகுதியில் அரசு புதிதாக அரசு மதுபானக் கடை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால், பெண்களுக்கும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கும் பாதுகாப்பு இருக்காது. எனவே மதுபான கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அடிப்படை வசதிகள் குறித்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அரசு மதுபான கடை திறப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அறிந்த கிராம மக்கள், கடை அமைய உள்ள இடத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அடிப்படை வசதிகள் கேட்ட மக்களுக்கு அரசு மதுபானம் கடையை திறப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், மதுபான கடையை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மதுபான கடை அமைய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மதுபான கடை அகற்றும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என மக்கள் தெரிவித்தனர்.

Comments
Post a Comment