போரூரில் தீவிபத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதம்
போரூரில் தீவிபத்தில் 17 இ-பைக்குகள் எரிந்து சேதம்
சென்னை போரூரில் குன்றத்தூர் பிரதான சாலையில் ராஜாராம் என்பவர் இ-பைக் ஷோரூம் நடத்தி வருகிறார். இங்கு 5 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமி்ல் இ-பைக்குகள் வாங்கியுள்ளனர். சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சலுகைகளுடன் பைக் விற்பனை நடைபெற்று வந்தது. மேலும் இவர்களிடம் பைக் வாங்கியவர்கள் சர்வீஸ் செய்வதற்காகவும் பைக்குகளை கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இந்த ஷோரூமில் உள்ள ஒரு இ-பைக்கிற்கு சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது எதி்ர்பாராதவிதமாக பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள் அலறியடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது. இதில் 5 புதிய இ-பைக்குகள், மற்றும் சர்வீஸ் செய்வதற்காக வந்த 12 பைக்குகள் என மொத்தம் 17 பைக்குகள் எரிந்து சேதமானது. மேலும் ஷோரூமிலிருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
இது குறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது. இது குறித்து போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பேட்டரிகளால் இயங்கும் இ-பைக்குகள் சமீப காலமாக அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. வாடிக்கையாளர்களும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இ-பைக்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தொடர்ந்து சில இடங்களில் இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்து வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவது வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Comments
Post a Comment