பாலக்கோடு அருகே 3 ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம்..!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, எந்தெந்த பகுதிகள் மிகவும் பின்தங்கிய மற்றும் மலைவாழ் மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை தேர்வு செய்து அத்தகைய பகுதிகளில் அரசின் அனைத்து துறையினுடைய அலுவலர்களையும் அழைத்துச் சென்று, அரசு திட்டங்களை எடுத்துரைத்து, அங்குள்ள பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேளாரஅள்ளி, எர்ரனஅள்ளி, கரகதஹள்ளி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில் எர்ரனஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் பேளாரஅள்ளி தலைவர் ராதாமாரியப்பன், எர்ரனஹள்ளி தலைவர் வளர்மதி சின்னவன், கரகதஹள்ளி பஞ்சாயத்து தலைவர் ராஜிமுத்துவேல் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினார்கள். இந்த முகாமில் கலைஞரின் வீடு வசதி திட்டம், முதியோர் உதவித்தொகை,வீட்டுமனை பட்டா, ஜாதி சான்றிதழ் உட்பட 12 அரசு துறைகள் சார்பில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிற்பகல் 3 மணி வரை நடந்த முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் கவுன்சிலர் அழகுசிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment