ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்த 10 ஆண்டுகளாக குறைவு ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி சைலேந்திரபாபு பேட்டி ..!
தருமபுரி பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்கள், விஜய்ஸ் ஏஸ் அகாடமி ஆகியவை சார்பில் புதிதாக விஜய்ஸ் டி.என்.பி.எஸ்.சி. அகாடமி என்னும் மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தருமபுரி முகமது அலி கிளப் ரோடு, பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகத்தின் 2-வது தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிறுவனம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன் தலைமை தாங்கினார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகாபிரவின், தலைமை செயல்பாட்டு அலுவலர் சந்திர பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்ஸ் ஏஸ் அகாடமி மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி வரவேற்றார்.
இதில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்து அரசு தேர்வுகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து பேசினார். நடராஜ் டி.என்.பி.எஸ்.சி. இன்ஸ்டியூட் இயக்குனர் நடராஜ், இன்ஸ்பயர் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் மாதேஸ்வரன், சி.ஆர்.பி.எப். ஓய்வு பெற்ற கமாண்டண்ட் கோகுல் குமார் ஆகியோர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கி பேசினார்கள். விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். படிக்க டெல்லி சென்று தமிழக இளைஞர்கள் படித்தனர். தற்போது சென்னையில் இருந்து படிக்கும் வசதி உள்ளது. தருமபுரி மாவட்ட இளைஞர்கள் தருமபுரியில் இருந்து படித்து செல்லும் வகையில் தற்போது வசதி வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்,, ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. அரசு பணி என்பது அமைதியை தரக்கூடிய ஒரு சேவைப்பணி. இந்த பணிக்கு வருவதற்கு போட்டி தேர்வு எழுதி வரவேண்டும். மத்திய அரசின் ராணுவப்பணிக்கு தமிழக இளைஞர்கள் அதிகம் சேர வேண்டும். காவல்துறையில் காவலராக சேர்வது என்பது கடும் போட்டியாகவே உள்ளது.போட்டித் தேர்வு எழுத 6 மாதம், ஒரு வருடம் படித்த பின்னரே தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் நிலை உள்ளது. காவல்துறையில் இன்று 65 சதவீத பட்டதாரிகளே காவலராக பணியாற்றுகின்றனர். அதுவும் 35 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் தான் அதிகம். எம்.எஸ்.சி. படித்தவர்கள், பி.எச்.டி. படித்தவர்கள் காவல் துறை பணியில் உள்ளனர். ஒரு காலத்தில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும். காவலர் பணிக்கு சென்றுவிடலாம். ஆனால் இன்று பட்டதாரிகளே சேர திணறும் நிலையில் உள்ளது. அதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. தற்போது காவல்துறை பணி கல்வி, அறிவியல் அறிவு சார்ந்த வேலையாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடக்கிறது. அதை கண்டுபிடிக்க தேவையான நுண்ணியல் அறிவு தேவை. சைபர் குற்றங்கள் அதிகம் நடக்கிறது. எலக்ட்ரானிக் குற்றங்கள் பற்றி பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை . குறிப்பாக மொபைல் போன்களை எப்படி கையாளுவது என சரியாக தெரியவில்லை. மொபைல் போன் மூலம் மோசடிகள் அதிகம் நடக்கிறது. தொழிலதிபர்கள் கூட கோடிக்கணக்கில் பணம் இழக்கும் சம்பவம் நடக்கிறது. மேலும், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இங்கிருந்து அழைத்து சென்று குற்ற செயலியில் ஈடுபட மதுவாங்கி கொடுத்து, அடிமைப்படுத்தி, குற்ற செயலில் ஈடுபட வைக்கின்றனர் .இதுபோன்ற குற்ற செயல்களை காவல்துறையினரால் மட்டுமே விசாரிக்க முடியும்.
கடந்த 33 வருடங்களுக்கு முன்பு நான் இங்கு ஏ எஸ் பி ஆக பணியாற்றினேன். அப்போது வத்தல்மலை பகுதியில் ஏக்கர் கணக்கில் கஞ்சா பயிரிட்டிருந்தனர். அதை கண்டுபிடித்து அளித்த காலம் உண்டு. ஆனால் இப்போது அதெல்லாம் இல்லை. படிக்கும் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லுவதில்லை. அவர்கள் போட்டி தேர்வுக்கு கடுமையாக படித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். தற்போது தருமபுரி மாவட்டத்தில் கல்வி, பொருளாதார புரட்சி தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா குறியீட்டிலும் முன்னிலையில் உள்ளது. துப்பாக்கி சூடு போட்டி, புலன் விசாரணை உள்ளிட்ட எல்லாவற்றிலும் முதலிடத்தில் தமிழகம் இருக்கிறது. அதை தொடர்ந்து கடைபிக்க வேண்டும். அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் தான் இந்தியா கடுமையான போட்டியில் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் சாலைகளில் பைக் ரேசிங் நடத்தி சாகசம் செய்வதை நிறுத்திவிட்டு, உண்மையான பைக் ரைசில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும்.மேலும், இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்கில் போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும் என அவர் கூறினார். விழாவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, தி.மு.க. .நகர செயலாளர் நாட்டான் மாது மற்றும் முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment